குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் அதனைத் தவிர்க்கும் முறைகள்.
குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் அதனைத் தவிர்க்கும் முறைகள்.
நம் முன்னோர்கள் கால்பதிக்காத துறையே கிடையாது, அவர்கள் ஒரு ஆண்டினை ஆறு பருவங்களாகப் பிரித்து வைத்துள்ளனர்.
அவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1.பின்பனி காலம் – தை, மாசி மாதங்கள்
2.இளவேனில் காலம் – பங்குனி, சித்திரை
3.கோடை, முதுவேனில் காலம்கி – வைகாசி, ஆனி
4.கார் (மழை) காலம் – ஆடி, ஆவணி
5.இலையுதிர்காலம் – புரட்டாசி, ஐப்பசி
6.முன் பனிக்காலம் -கார்த்திகை, மார்கழி.

நம் சித்தர்கள் கூறியுள்ள பருவங்களும் முக்குற்றங்களின் (முத்தோஷ ங்களின்) ஏற்றத் தாழ்வுகளும்.
தை, மாசி – பின்பனி – கபத்தின் வளர்ச்சி
பங்குனி, சித்திரை – இளவேனில் – கபத்தின் சீற்றம்
வைகாசி, ஆனி – கோடை – கபத்தின் சமநிலை வாயுவின் வளர்ச்சி
ஆடி, ஆவணி – மழை – வாயுவின் சீற்றம், பித்தத்தின் வளர்ச்சி
புரட்டாசி, ஐப்பசி – இலையுதிர் – வாயுவின் சமநிலை பித்தத்தின் சீற்றம்
கார்த்திகை, மார்கழி – முன்பனி – பித்தத்தின் சமநிலை
நாம் இந்தக்கட்டுரையில் குளிர்காலத்த்தின் தன்மையினைப் பற்றியும் இக்காலத்தில் குழந்தைகளுக்கு பிரச்சனைகள் மற்றும் அதனைத் தவிர்க்கக் கடைபிடிக்க வேண்டிய முறைகளைக் காணலாம்.
பனி/குளிர் காலம்: (கார்த்திகை முதல் மாசி வரை): குளிர் காலத்தில், அதாவது கார்த்திகையிலிருந்து மாசி வரை முன்பனி, பின்பனி என்று இரண்டு பருவங்கள் உள்ளன. இந்தக் காலத்தில் வயிற்றிலுள்ள தீ (அக்னி) வலுவுள்ளதாக இருக்கும். இந்தப் பருவத்தில், இதமான பருவநிலை இருந்தாலும், கூடவே தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக, ‘வைரஸ்’ தொற்றுகள் முதியவர்களையும், குழந்தைகளையும் அதிகம் தாக்கும். இந்த காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவுமுறைகளை கடைபிடித்தால் நோய் வராமல் காத்து கொள்ளலாம்.
குளிர்காலத்தில் பசி அதிகமாகத் தோன்றும். எனவே குளிர் காலத்தில் உடலுக்கு வலுவூட்டும் உணவை உட்கொள்ளல் வேண்டும். குளிர் காலத்தில் குளிரின. சேர்க்கையால் வாயு உடலில் வளர்ந்து விடும். ஆகவே நாம் உண்ணும் உணவு, உடலில் அதிகரித்துள்ள பசி, ஜீரண சக்திக்கு ஈடாகவும், உடலில் அதிகரித்துள்ள வாயுவைத் தணிக்கக்கூடியதாகவும், இருக்க வேண்டும்.
பொதுவாக குளிர்காலத்தில் பசையுள்ளதும், இனிப்பு, உப்பு, புளிப்புச் சுவையுள்ளதுமான உணவை உட் கொள்ள வேண்டும். வெல்லம், மாவு, இவைகளால் செய்த பொருட்கள், உளுந்து, கரும்புச் சாறு, பால், மாமிசம் இவற்றால் செய்த பொருட்கள், எண்ணெய், புதிய அரிசியால் சமைத்த அன்னம் ஆகியவற்றை உண்ண வேண்டும்.
உடற்பயிற்சி, எண்ணெய் குளியல், வெயிலில் உடல் படும்படி இருத்தல் இவை உடலுக்கு நன்மை வழங்கும். குளிப்பதற்கு வெந்நீரை பயன்படுத்துவது நன்மையினைத் தரும்.
குளிர்காலத்தில் குழந்தைகள் நுரையீரல் சம்பந்தமான கோளாறுகள், சருமக் கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர்.
நுரையீரல் தொந்தரவுகாளான இருமல், சளி : குளிர் காலத்தில் மூக்கில் நீர் வடிவது, காய்ச்சல், இருமல், சளித் தொல்லைகள் வர வாய்ப்புகள் அதிகம். பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுக் கிருமிகளால், இத்தொல்லை வரும். உடல் சூட்டை அதிகரிக்கும் உடை அணிவது, கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்லாமல் இருப்பது, ஆஸ்துமாவிற்கு, மருந்துகளை கைவசம் வைத்திருப்பது, குடிப்பதற்கு வெந்நீர் பயன்படுத்துதல், சுக்குமல்லி காபி, பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள் கலந்து அருந்துதல் போன்ற அஞ்சரப்பெட்டி மருத்துவ முறைகளைக் கையாள்வதன் மூலம் தவிர்க்கலாம்.


சருமக் கோளாறுகள்:
சருமவறட்சி – குளிர்காலத்தில் காற்றில் ஈரப்பதம் குறைவாக இருப்பதால் தோல்வறட்சி அதிகம் காணப்படும். குழந்தைகளின் தோலானது பெரியவர்களின் தோலைவிட மிகவும் மிருதுவானது, மிக எளிதில் வறட்சியடையும் தன்மையுடைது. பொதுவாக குழந்தைகளின் கை, கால், முழங்கை, முழங்கால், முகப் பகுதிகள் எளிதில் வறண்டுவிடும். இதனைத் தவிர்க்க குழந்தைகளின் உடைகள் சுத்தமானதாக இருக்கவேண்டும், சுத்தமான தண்ணீரால் குளிப்பாட்ட வேண்டும். குழந்தைகளின் சருமத்திற்கேற்ப ஆலிவ் எண்ணெய், நல்ல எண்ணெய், தேங்காய் எண்ணெய் உடலில் பூசுவதன் மூலம் தோல்வறட்சியைக் கட்டுப்படுத்தலாம். உதடுவெடிப்பிற்கு உதட்டில் நெய் தடவுதல், தேவையான அளவு தண்ணீர் அருந்துவதன் மூலம் தவிர்க்கலாம்.
தொற்றுநோய் தாக்கம்: நோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ள குழந்தைகள் குளிர்காலத்தில் குழந்தைகள் காது, மூக்கு, தொண்டைத் தொற்றுகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். விட்டமின் சி அதிகமுள்ள பழங்களை கொடுப்பதன் மூலம் இதனைத் தவிர்க்கலாம். இதுமட்டுமல்லாமல் காய்கறிகள், ஒமேகா 3 சத்துள்ள மீன்கள், சிறுதானியங்கள், நிலக்கடலை, பாதாம், முந்திரி, தேன் போன்ற பொருட்களை உணவில் அதிக அளவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கலாம்.

குளிர்காலத்தில் மட்டுமல்லாமல் பொதுவாகத் தவிர்க்க வேண்டியவை: குளிர்சாதப்பெட்டியில் வைத்து உபயோகப்படுத்தும் அனைத்து உணவுகளும், பனிக்கூழ் எனப்படும் ஐஸ்கிரீம், பெட்டகத்தில் அடைக்கப்பட்ட பழசாறு, பால்பொருட்கள் மற்றும் இதர குளிர்பானங்கள், துரித உணவுகள்.
அனைவரும் நோயின்றி வளத்துடன் வாழ வாழ்த்தும்.
மரு.அழ.முருகேசன் MD.,FAMS.,PhD (TM) , MITBCCT (UK),
மரு.மு.யோகானந்த் MD., MEM., Msc (Varmam)., MSCP., MITBCCT (UK),
மரு.மு.சத்யபாமா BAMS., MBEM, MITBCCT (UK).
சத்யா கிளினிக், 51/2, செந்தூர்புரம் முக்கிய சாலை, காட்டுப்பாக்கம், சென்னை - 600 056.
அலைபேசி எண்கள் : +918695545234, +919843118402.