தமிழர் இலக்கியங்களில் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைகள் பற்றிய குறிப்புகள்.
தமிழ் சித்தமருத்துவம் என்றவுடன் நமக்கு ஞாபத்திற்க்கு வருவது மூலிகைப் பொடிகள், தீநீர், இலைச் சாறுகள், இளகம் (லேகியம்), பற்பம், செந்தூரம், தொக்கணம் என்னும் தடவு இயல் மருத்துவம், வர்மம், யோகம் போன்றவைகளே. ஆனால் நம் முன்னோற்கள் அறுவை சிகிச்சையும் மேற்கொண்டுள்ளனர்.
நம் தமிழ் இலக்கியத்தில் ஏராளமான மருத்துவ முறைகளும் அறிவுரைகளும் உள்ளன. அந்தக் குறிப்புகளில் சிலவற்றை இக்கட்டுறையில் காண்போம். கம்ப இராமாயணத்தில் கட்டி அறுவை சிகிச்சை

“உடலிடைத் தோன்றிற்று ஒன்றை அறுத்து அதன் உதிரம் ஊற்றிச் சுடலுறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்ப்பர்”
(கம்பராமாயணம் -7417)
பாடலில் விளக்கம்: அதாவது கட்டியை அறுத்து அதனுள் இருக்கும் இரத்தத்தை வெளியேற்றி நெருப்பில் வாட்டி கிருமிகளைக் கொன்று மருந்து வைத்தல்.
குலசேகர ஆழ்வாரின் அறுவை சிகிச்சை பற்றிய பாடல்

“வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாக் காதல் நோயாளன்போல் மாயத்தால் மீளாத்துயர் தரினும் வித்துவக்கோட் டம்மானேநீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே”
பாடலின் விளக்கம்: அதாவது வாளால் வெட்டி தீயால் வாட்டினாலும் மருத்துவனை நோயாளி வெறுக்கமாட்டான் அதுபோல துயர்களைத் தரும் உன்னை நான் வெறுக்கமாட்டேன் என்கிறார்.
புறநானூற்றில் பஞ்சு கட்டு.

“செருவா யுழக்கி குருதி யோட்டி கதுவாய் போகிய துதிவா யெஃகமொடு பஞ்சியும் களையாப் புண்ணர்” (புறநானூறு 353)
பாடலின் விளக்கம்: அதாவது பஞ்சு வைத்து கட்டிய புண் ஆறும் முன்பே மறுபடியும் போர்க்களத்திற்கு வந்து பஞ்சுக் கட்டுடனேயே வாளேந்தி போர் புரிந்த வீரர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். பதிற்றுப்பத்தில் தையல்:-
“மீன்தேர் கொட்பிற் பனிக்கயம் மூழ்கிச் சிரல்பெயர்ந் தன்ன நெடுவெள் ளூசி நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின் அம்புசேர் உடம்பினர்” (பதிற்றுப்பத்து 42:2-5)
பாடலின் விளக்கம்: இதில் தண்ணீருக்குள் இருக்கிற மீனைக் கொத்தி உண்பதற்காக நீரில் பாய்ந்து, அடுத்த நொடியிலேயே நீரைவிட்டு மேலே பறந்து வருகிற சிரல் பறவையைப் போல ஒரு பெரிய ஊசி புண்ணுக்குள்ள நுழைந்து வெளியே வருதாம். அதாவது தையல் போடும் முறை.
மணிமேகலையில் பெண் மருத்துவர் பற்றிய குறிப்பு.

இவர்கள் மருத்துவி என்று அழைக்கப்பட்டனர்.
“ஆருயிர் மருத்துவி துன்னிய வென்னோய் துடைப்பா யென்றலும்” (மணிமேகலை 17. 15)
துறவிகள் இணைந்து நடத்திய 'சக்கர வாளக் கோட்டம்' என்ற மருத்துவமனையைப் பற்றியும் இந்நூல் கூறுகிறது.
கொங்கு மண்டல சதகத்தில் மகப்பேறு அறுவை சிகிச்சை.
“குறைவறு தெண்ணீர் நதியணை காந்த புரத்தொடுநல் இறைமகளார் மகவீனப் பொறாது உடல் ஏங்க வகிர் துறைவழி ஏற்று மகிழ்வூட்டும் அங்கலை தோன்றி வளர் மறைவழி நேர் நறையூர் நாடுசூழ் கொங்கு மண்டலமே”
‘கொங்கு மண்டல சதகம்’ என்ற சிற்றிலக்கியத்தில் காந்தபுரம் என்ற ஒரு பகுதியை ஆண்ட வேந்தனின் மகள் பிள்ளையைப் பெற்றெடுக்க முடியாமல் பிரசவ வேதனையால் துன்பப்படுகிறாள். அப்பெண்ணின் வயிற்றைக் கிழித்துத் தன் திறமையால் குழந்தையை வெளியில் எடுத்தாளாம் கொங்கு நாட்டைச் செர்ந்த நறையூரில் வாழ்ந்த மருத்துவச்சி ஒருவர். கம்பராமாயணத்தில் வெட்டுண்ட பாகங்களை ஒட்டுதல் பற்றிய பாடல். இதுவும் கம்பராமாயணத்தில் 'மெய்வரு வகிர்களாகக் கீண்டாலும் பொருத்துவிப்பதொரு மருந்து' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்த உடலை பதப்படுத்துதல்:-
இறந்துபோன தசரதனது உடம்பை கேகய நாட்டுக்குச்சென்றுள்ள பரத சத்துருக்கனர் வந்து ஈமக்கடன் செய்யும் வரை கெடாமல் இருப்பதற்காகத் தைலத்தில் இட்டு வைத்ததைக் கூறுகிறது. தைலம் ஆட்டு படலம் (பாடல் 608)
சத்யா கிளினிக்,
51/2, செந்தூர்புரம் முக்கிய சாலை, காட்டுப்பாக்கம், சென்னை -600056