நான் வர்மம் பேசுகிறேன்- பகுதி இரண்டு
அரி ஓம் குருவே துணை
எனது (வர்மத்தின்) மறுபெயர்கள்/வேறு பெயர்கள்.
சரம், காலம், வாசி, சூட்சுமம், காலன், காற்று, ப்ராணன், ஏமம், வன்மம், மர்மம், ஒடிறு, அருவம், ஈடு, காலன், நரம்படி, முறிவு, ஆசி, இன்னும் பல....
என்னைப்பற்றிய நூல்கள்:

சித்தர் பெருமக்கள் என்னப்பற்றி எழுதிய பல சுவடிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை காண்போம். வர்ம சூத்திரம், வர்ம கண்ணாடி, வர்ம ஊசி, வர்ம திறவுகோல், ஒடிவு முறிவு சாரி, வர்ம தண்டூசி, வர்ம குடோரி, வர்ம ஆணி, வர்ம லாட சூத்திரம், தட்டு வர்ம நிதானம், வர்ம பீரங்கி, வர்ம காண்டம், வர்ம காவியம், வர்ம சூட்சம், வர்ம கண்டி, வர்ம அளவு நூல், வர்ம சாத்திரம், வர்ம சஞ்சீவி…..
எனது வரலாறு: என்னைப் பற்றிய பல வரலாறுகள் உள்ளன. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

உலகின் அனைத்துக் கலைகளும் முதல் சித்தன்,தமிழினத்தின் முதல் அரசன், எல்லோருக்கும் இறைவன்,தென்னாட்டை உடையவன் அப்பன் கடவுள் சிவனே இவ்வுலகிற்கு அளித்தார். தமிழ் மொழியானது சிவனின் உடுக்கையில் இருந்து வந்த ஒலியில் உருவானது. நானும் அப்பன் முதல் சித்தன் சிவனால் இவ்வுலகுக்கு அருளப்பட்டேன்.
ஒரு முறை இறைவன் சிவனும் இறைவி பார்வதி தேவியாரும் கானகத்தில் உலா வரும்போது வேடன் ஒருவன் மரத்திலிருந்து திடீரென மயங்கி விழுந்து சுயனினைவு இழந்ததைக் கண்டார். இறைவி இறைவனிடம் மயங்கி விழுந்த வேடனை எழுப்புமாரு வேண்டினார். இறைவியின் வேண்டுதலுக்கு இணங்கி

ஓம் ஸ்ரீஹரி என்ற மந்திரத்தை உச்சரித்து தன் கையிலிருந்த தடியால் வேடனை தட்டி பார்வதி தேவியிடம் அவன் முகத்தில் தம் கமண்டலத்தில் இருந்த நீரை வேடனின் தெளிக்க அவன் சுய நினைவடந்தான். இது எவ்வாறு சாத்தியமென பார்வதி தேவி வினவ இறைவன் இறைவிக்கு என்னைக் கற்பித்தார்.

இறைவி பார்வதி தன் மைந்தன் தமிழ் கடவுள் குமரனுக்கும், குமரன் வாயிலாக நந்தி தேவர், அகத்தியர் மற்றும் அனைத்து சித்தர் பெருமக்களுக்கும் கற்பிக்கப்பட்டது.
வர்ம காவியம் என்ற நூலில், அரக்கன் சூரபத்மன் ரிஷிகளைத் துன்புறுத்த அவர்களனைவரும் ஒன்றாக சேர்ந்து சிவனிடம் சென்று முறையிட்டனர். இறைவன் சிவன் வேலனிடம் அரக்கனை கொல்லப் பணிந்தார். வேலன் தன் அன்னையிடம் சூரபத்மனை கொல்ல ஆலோசனை கேட்டார். அதனை பின்வரும் பாடலில் காணலாம்.
‘‘வந்தோர் மகனை நோக்கி வலுவுறும் அசுரன் உயிரைத்தான
கொன்றிடவேணுமென்றால் சொல்லுவேன்னொன்று கேள்நீ நந்தியொடு சிவனும்
சொன்னகாவியத்தில் படுவர்மம் பன்னிரண்டும் தொந்தமுடல் தொடுவர்மம்
தொண்ணூற்றாறினொடு தட்டுமுறையுடன்தன் தடைமுறையுந்தானறிய
சூட்சமுடன் இடமுரத்தார் கேள்
உந்தனுக்கு இந்தமுறை நன்றாய் தோன்றும்
உலகுதனிலொருவருக்கும் விளம்பிடாதே
அந்தரமாய் வாய்வுவரியின் எல்லைதனில்
அருளுடனே வேலதனை அழுத்திவிட்டால்
வந்தவந்த அசுரரெல்லாம் அழிந்து போவார்’’
இப்பாடலில் தாய் உமையாள் வேலனிடம் சிவனும் நந்தியும் சொன்ன படுவர்மம், தொடுவர்மம், தட்டு முறைகள், தடைமுறைகள் இவற்றை அறிந்து போர் புரிந்தால் அரக்கனை வெல்லமுடியும் என கூறியுள்ளதை அறிகின்றோம்.
தமிழ் கடவுள் முருகனிடமிருந்து அகத்தியருக்குச் சென்ற வரலாற்றை அடுத்த இதழில் காண்போம்
மரு.அ.முருகேசன், மரு.மு.யோகானந்த், மரு.மு.சத்யபாமா
சத்யா கிளினிக்,
352 பி.ஜி அவென்யூ முதல்தெரு விரிவாக்கம்,காட்டுப்பாக்கம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா - 600 056கைபேசி எண்: +91 98431 18402, +91 63811 89796,+91 86955 45234
Email: sathyapolyclinic@gmail.com
Web: http://sathyapolyclinic.wix.com/ayush
Facebook pages: Sathya Clinic, Maayon PAIN Relief Clinic