top of page

Mystric History of Varmam (வர்மத்தின் வரலாறு)

வர்மத்தின் வரலாறு.

1 : 1 வர்மம் என்றால் ஏன்ன? 1 : 2 மருத்துவத்தில் வர்மத்தின் பங்கு 1 : 3 வர்மமும் மனிதஉடலும் 1 : 4 வர்மத்தைப் போன்ற பிற மருத்துவங்கள் 1 : 5 வர்மத்தின் உட் பிரிவுகள்

வர்மம் ஓர் இந்திய மருத்துவம். குறிப்பாக தமிழ் பரம்பரை

மருத்துவம் (Tamil Traditional Medicine) தமிழர்கள் இதை ஓரு தற்காப்பு கலையாகவும், மருத்துவ முறையாகவும் கையாண்டு வந்துள்ளனர். சித்த மருத்துவ முறையின் ஓர் உப மருத்துவமாக இதை கையாண்டாலும்,வர்ம மருத்துவம் ஓரு தனித்துவம் வாய்ந்த மருத்துவம் ஆகும். இந்திய மருத்துவம் பூரணப்பட வேண்டுமானால் வர்ம மருத்துவம்இடம்பெறுவது அவசியமாகும்.

1 : 1 வர்மம் என்றால் ஏன்ன? மனித உடலில் சில குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அல்லது எல்லா நேரத்திலும், குறிப்பிட்ட வேகத்தில் காயம் ஏற்படுமாயின் செயலிழத்தல், நோய் தோன்றல், மயக்கம் மற்றும் மரணம் ஆகியன ஏற்படுகின்றன. இந்த நிகழ்வுகளே ‘வர்மம்’ என்று அழைக்கப்படுகின்றது. மனித உடலின் இந்த குறிப்பிட்ட இடங்களைப் பயன்படுத்தி, நோய்களை குணமாக்கவும் முடியும், மயக்கத்தைப் போக்கவும் முடியும், உடல் வலிமையை பெருக்கவும் முடியும். இவ்விதம் குணமாக்கும் முறையே வர்ம மருத்துவமாகும்.

உள்ளபடி நூற்றெட்டு தலம் சாவாகும் உணர்வாகி அத்தலங்கள் உயிருமாகும் கள்ளமுற்ற அத்தலங்கள் பிணியுமாகும் களங்கமாற்றல் அத்தலங்கள் சுகமேகாணும் உள்ளுணர்வாய் அத்தலங்கள் வாசியேற்ற உற்றதினால் அத்தலங்கள் உறுதி சேரும்’

புள்ளடிபோல் அத்தலங்கள் கண்டவர்கள் புகலார்கள் எல்லோரும் புவியிலுள்ளோர்க்கே!

(வர்மஓடிவுமுறிவுசரசூத்திரம்-1200)

மனித உடலில் முக்கியமான வர்மங்கள் 108 இடங்களில் காணப்படுகின்றன. இவைகளே ஒரு மனிதன் இறப்பதற்கும் (Death) உயிரோடுஇருப்பதற்கும்(Live), நோய் நிலையை அடைவதற்கும் (Disease), சுகமடைவதற்கும் (Treatment), ஆரோக்கியத்துக்கும்(Health) காரணமாகஅமைகின்றன.

1 : 2 மருத்துவத்தில் வர்மத்தின் பங்கு மருத்துவத்தில் வர்மத்தின் பங்கு மகத்தானது. நோய் எவ்வாறு தோன்றுகிறது என்று கேட்டால் ‘நோய்கிருமிகளின் தொற்று’ (Infection)என்றுஉடனே கூறும் காலமிது. உண்மைதான். பெரும்பாலான நோய்கள் தொற்றாலே ஏற்படுகின்றன என்றாலும் இதைத்தவிர பல்வேறு உடல்உபாதைகளை (disorder)அன்றாடம் நாம் ஏதிர்கொள்ளத் தான் செய்கிறோம். இதற்கு பல காரணிகள் உண்டு. உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, வசிக்கும் இடம், வாழும் காலம், செய்யும் தொழில், பாரம்பரிய கர்மம் எண்ணும் எண்ணம் இவை எல்லாவற்றோடு கூட வர்மமும் ஒரு காரணமாகும். உண்ணும் உணவு அறுசுவையாக பகுக்கப்பட்டு, ஏழு உடல் தாதுக்களாக மாற்றப்பட்டு உடலை கட்டி எழுப்புகிறது. அறுசுவைகளின் பகுப்பில் கிடைக்கும் பஞ்சபூதங்களின் கூட்டுறவால் தோன்றும் முக்குற்ற மாறுபாடுகளினால் உடலில் நோய் தோன்றவோ (disease),நோய் மறையவோ (treatment), ஆரோக்கியம் (Health)கிடைக்கவோ செய்யும். உணவு, உணவாக (balanced diet)செல்லும் போது உடலுக்கு உறுதி சேர்க்கும். மாறுபட்டு (imbalanced diet)செல்லும் போது நோயை தோற்றுவிக்கும். மருந்தாகச் செல்லும் போது நோயை குணப்படுத்தும். உண்ணும் உணவுஉடலுக்கு சக்தியை கொடுப்பது போலவே சுவாசிக்கும் காற்றும் உடலுக்கு சக்தியை கொடுக்கும்.

‘உற்பனமாம் நாடி மூன்றும் குரு நாடியாகும் உறப்பாக கண்டவனே பண்டிதன் தான் ஊடுருவல் போலே பாய்ந்த நரம்பிதாமே உத்தமனே அசைந்தோடி ஆடிநிற்கும் அறிவான ஆதாரம் ஆறும்சுற்றி அகமிருந்து வாதம் பித்தம் சிலேற்பம் காட்டும்’. (உற்பத்தி நரம்பறை-130/1000)

சுவாசிக்கும் காற்று சந்திரகலை (இடகலை நாடி),

சூரியகலை (பிங்கலை நாடி), அக்கினி கலை (சுழுமுனை நாடி) ஆகிய மூன்று கலைகளில் செயல்படும்போது ‘வாசி’ எனும் பிராண சக்தி(vital energy)உற்பத்தியாகிறது. இதை சீன மருத்துவத்தில் “Qi” என்று அழைக்கிறார்கள். தொடர்ந்து ஓடி சுற்றுவதால் இது சரம் எனப்படும். இச்சரம் தசநாடிகள், தச வாயுக்கள், ஆறாதார சக்கரங்கள், பஞ்ச பூதங்கள் இவற்றோடு இசைந்து முக்குற்றத்தை இயக்குவிக்கும் இம்முக்குற்றம் (வாதம், பித்தம், கபம்) நோய்க்கும், சிகிச்சைக்கும், சுகத்துக்கும் காரணமாக அமைகின்றது.

வாசி எனும் பிராண சக்தி உடலில் சீராக இயங்கும் போது உடல் இயல்பு (Normal)நிலையில் இயங்கும். இந்த இயக்கத்தில் அதாவது சரஓட்டத்தில் ஏதேனும் தடையோ பாதிப்புகளோ ஏற்படுமாயின் உடல் நோய் நிலைக்குத் தள்ளப்படும். இந்த இயக்கம் சீர்செய்யப்படும் போது நோய் குணமாகும்.

இந்த சரஓட்டத்தை தடைப்படுத்தவும், சீர்செய்யவும் வர்மம் பயன்படுகிறது. வர்ம தலங்களை முறைப்படி கையாள்வதன் மூலம்இதைச்செய்யலாம். வர்ம காய காரணமேதுமின்றி சாதாரண நோய் நிலைகளிலே கூட பாதிக்கப்பட்ட முக்குற்றம், சீர்கேடடைந்த தச வாயுக்களின்இயக்கம் போன்றவற்றை வர்மத்தை பயன்படுத்தி- சரஓட்டத்தை சீர்படுத்தி சரிசெய்யலாம். இவ்வாறு எல்லா நோய்நிலைகளிலும் வர்மத்தை பயன்படுத்தி மருத்துவம் மேற்கொள்ளலாம்.

2 : 7 வர்மத்தின் ஆதிவரலாறு

ஆதிசித்தன் சிவனே வர்மத்தின் தந்தையென பல நூல்களும் சான்று பகர்கின்றன. சிவன், விஷ்ணு, பிரம்மா இவர்களுக்கிடையே யார் தெய்வமென நடந்த போட்டியின் விளைவாய் நடந்த யுத்தத்தில் பிறந்ததே வர்மம். இறுதியில் வாத, பித்த, கபம் ஒவ்வொன்றுக்கும் ஓவ்வொருவர் தெய்வமானார்கள் இதில் கிடைத்த வர்மஅறிவியலை சிவன் மனதில் பதிய வைத்தார்.

1. சிவனிடமிருந்து பார்வதிதேவிக்கு சென்ற வரலாறு : ஒரு சமயம் சிவனும் பார்வதியும் ஒரு காட்டுக்குச் சென்றனர். அங்கிருந்து சிவகிரி என்ற மலைக்குச் சென்றபோது ஒரு வேடன் மரத்தில்ஏறி தவறி விழுந்து மயங்கிக் கிடப்பதைக் கண்டனர். பார்வதி தேவியின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் தன்னிடமிருந்த பொற்பிரம்பால் வேடனைத் தட்டிவிட வேடன் மயக்கம் நீங்கி இயல்பு நிலையை அடைந்தான். இச்செயலின் இரகசியத்தையும், மனித உடலில் வர்மம், அடங்கல்எனஇருவித தானங்கள் உண்டு என்பதையும் வேறு பல வர்ம இரகசியங்களையும் சிவன் பார்வதிக்கு உரைத்தார்.

2. பார்வதிதேவியிடமிருந்து முருகனுக்கு சென்ற வரலாறு :

‘ஆதியில் வர்மம் வந்த அடிவரலாறு தன்னை வாதியாம் வர்ம காவியம் சொல்ல செகமுகன் காப்பு தானே’ வர்ம காவியம் என்ற நூலில், சூரபத்மன் என்ற அசுரன் ரிசிகளை துன்புறுத்தவே அவர்களெல்லாம் ஒன்று கூடி சிவனிடம் சென்று அழுது நின்றனர். அவர் தன் மகன் வேலனை அழைத்து சூரபத்மனை கொல்ல பணித்தார். வேலனோ சூரனைக் கொல்ல இயலாது தன் தாயிடம் வந்து புலம்பி நின்றார்.

‘வந்ததோர் மகனை நோக்கி வலுவுறும் அசுரன் உயிரைத்தான் கொன்றிடவேணுமென்றால்சொல்லுவேனொன்று கேள்நீ நந்தியோடுசிவனும்சொன்னகாவியத்தில்படுவர்மம் பன்னிரண்டும் தொந்தமுடன் தொடுவர்மம் தொண்ணூற்றாறினொடு தட்டுமுறையுடன்தன்தடைமுறையுந்தானறிய சூட்சமுடன் இடமுரைத்தார் கேள் உந்தனுக்கு இந்தமுறை நன்றாய் தோன்றும் உலகுதனிலொருவருக்கும் விளம்பிடாதே அந்தரமாய் வாய்வுவரியின் எல்லைதனில் அருளுடனே வேலதனை அழுத்திவிட்டால் வந்தவந்த அசுரரெல்லாம் அழிந்து போவார்’ வேலனின் தாய் உமையாள் தன் மகனிடம் சூரனைக் கொல்ல வேண்டுமானால் நந்தியும், சிவனும் சொன்ன படுவர்மம், தொடுவர்மம், தட்டு முறைகள், தடைமுறைகள் இவற்றை அறிந்து போர் புரியச்சொல்ல வேலனும் அவ்வாறே செய்து சூரனை அழித்தார் என அந்நூல் கூறுகிறது.

சிவன், நந்தி ஆகியோருக்கு தெரிந்திருந்த வர்மக்கலை பார்வதி தேவியின் மூலமாகவும், சிவனிடமிருந்து நேரடியாகவும் முருகனுக்குச் சென்றது.

3. முருகனிடமிருந்து ஆகத்தியருக்குச் சென்ற வரலாறு :

‘நெஞ்சடை அரனார்பெற்ற செல்வனாங்குழந்தை வேலன் நெஞ்சினில் மகிழ்ச்சிகொண்டு நினைவுடனகத் தீசருக்கு மிஞ்சவே உபதேசித்த வெற்றியாந்த தட்டுவர்மம்’ (தட்டு வர்ம நிதானம்) முருகன் வர்மத்தின் இரகசியத்தை மிக்க மனமகிழ்வோடு அகத்தியருக்கு உபதேசித்தார்.

அகத்தியர் பல சித்தர்களுக்கு இக்கலையை பயிற்றுவித்தார்.

வேளி மலையில் அகத்தியர் வர்மம் கற்றது : (தெட்சணாமூர்த்தி காவியம்-778-780/1000) ‘நிலைக்கலாம் ஆதியிலே மைந்தா கேளு நிலையான வேளிமலைக்கு ஆகும் போது மலைதுருவ மத்தியிலே குகைதானுண்டு மார்க்கமுடன் அதிலொரு பெரியோர்தானும் கலைக்கு அதிகமான சில நூல்கள் பேசி கருணையுடன் இருக்கையிலே சென்றேன் யானும் சிலைக்கதிகம் அகத்தீசா வாவென்றே தான் தீர்க்கமுடன் உபசரித்து யிருஎன்றாரே’ ‘இருவென்று அமிர்தரசம் கொள்ளும் போது இன்பமுடன் சிலம்பிருக்கும் வகையைச் சொல்லி கருவென்ற பட்சியுட வீச்சம் காட்டி கால் பலமும் புஜ பலமும் நரம்பும் சொல்லி திருவென்ற மந்திரத்தின் தீர்க்கம் சொல்லி சிவ கயில பொதிகையில் போயிரு என்றார்கள் குருவென்ற பொதிகையிலே யிருந்து கொண்டு குருவான குருவெடுத்து ஆடினேனே. ஆடினேன் அதன்பிறகு கோடாகோடி அளவற்ற வித்தையெல்லாம் ஆடிக்கொண்டு நாடினேன் சுழிமுனையில் நாட்டம் கொண்டு நாதாந்த மனோன்மணியை கண்டுதேறி பாடினேன் வெகு கோடி சாத்திரங்கள் பக்தியுடன் கருக்கிடைகள் நன்றாய் தோண தேடினேன் மலை கெடுவு குகைகள் தேடிச் சென்று திறம்பெற்று மனம் நிலைத்தேன் பாரே’. தெட்சணாமூர்த்திகாவியம்-1000 என்ற நூல் வேளிமலையில் அகத்தியர் வர்மம் கற்ற வரலாறைக் கூறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வேளிமலையிலுள்ள குகையொன்றிற்கு அகத்தியர் சென்ற போது அங்கு ஒரு பெரியவர் அகத்தியரை வரவேற்று உபசரித்து

சிலம்பம், பஞ்சபட்சி, அடிமுறைகள் மற்றும் நரம்பியல் (வர்மம்), மந்திரம் இவைகளைக் கற்றுக் கொடுத்து, பொதிகையில் தங்கியிருக்குமாறு பணித்தார். அகத்தியரும்இவற்றையெல்லாம் கற்றுக்கொண்டு பொதிகை மலையில் தங்கியிருந்து குருவுக்கெல்லாம் குருவானார். அகத்தியருக்கு வேளிமலையில் வர்மம் கற்றுக் கொடுத்த பெரியவர் முருகனாக இருக்கலாம் என்று நம்புகின்றனர். வேளிமலையிலிருக்கும் (குமாரகோவில்) முருகன் கோயிலே இதற்கு சான்றாகும். இது குமரி மாவட்டத்தில் தக்கலைக்கு அருகில் உள்ளது.

4. சேர நாட்டிற்கு வர்மம் கிடைத்த வரலாறு : வர்மத்தின் வரலாறு பற்றி பல்வேறு விதமான கர்ண பரம்பரைக் கதைகள் உள்ளன. பழைய காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வர்மம் கற்கும் முகமாக இந்திரனை அணுகினர். அவர் இம்மன்னர்களை அலட்சியப்படுத்தவே, சிவனை அணுகினர். சிவபெருமான் அய்யன்,கையன் என்ற இரு வர்ம வல்லுநர்களை தயார்செய்து அவர்களை ஆரியங்காவு பகுதியில் தங்கி இருக்கச் செய்தார். பின் அவர்களை பாண்டிய மன்னனிடம் அனுப்பி வர்மத்தின் உயர்நுட்பங்களை கற்றுக்கொடுக்க சொன்னார். ஆனால் பாண்டிய மன்னன் அந்த வர்ம வல்லுநர்களைஅலட்சியப்படுத்தி ஏமாற்றினார். எனவே அவர்கள் இருவரும் சேர மன்னனை அணுகினர். சேர மன்னர் அவர்களை வரவேற்று அங்கேயே தங்கிஇருந்து வர்மத்தை மக்கள் பயனுறும் வகையில் வளர்க்க உதவி செய்தார். அவர்களும் அங்கேயே தங்கி குரு-சீடன் முறையில் வர்மத்தை கற்றுக்கொடுத்தனர்.

5. கன்னியாகுமரி மாவட்டத்தில் வர்மம் வளர்ந்த வரலாறு : தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் முஞ்சிறைக்கருகிலுள்ள பார்த்திவசேகரபுரம் என்ற ஊரில் கிடைத்த செப்பேட்டிலிருந்து (கி.பி.864)-9-ம் நூற்றாண்டில் அப்பகுதியை ஆண்ட கோகருநந்தடக்கன் என்ற ஆய்குல மன்னன் பார்த்திபபுரம் (பார்த்தீபபுரம்) என்ற நகரை உருவாக்கிஅங்கு கோயிலும் ஒரு பல்கலைக்கழகமும் அமைத்து அதில் வர்மக்கலையையும் மற்றும் பல்வேறு பாரம்பரிய தற்காப்புக் கலைகளையும் பயிற்றுவிக்கவும், வளர்க்கவும் செய்தார் என்ற செய்தியை அறிய முடிகிறது. குமரி மாவட்ட வர்ம மருத்துவர்கள் இன்றளவும் இம்மருத்துவக்கலையை பரம்பரை மூலமும், குரு-சீடன் முறை மூலமும் வளர்த்து பாதுகாத்து வருகின்றனர்.

சொந்த மகனென்றாலுங்கூட பல சோதனைகட்குட்படுத்தி, வர்மத்தைக் கற்று கொள்ளும் தகுதி அவருக்கு இருந்தால் மட்டுமே குருதட்சணையான பொருளை வாங்கி கற்றுக் கொடுக்கின்றனர். மேலும் ஓலைச் சுவடிகளாக இருந்த நூல்களை படியெடுத்தும்,கையெழுத்துப் பிரதிகளாக மாற்றியும் இம்மருத்துவ நூல்கள் ஆழிந்து விடாது பாதுகாத்து வருகின்றனர்.

Sathya Clinic,

52/1, Chendurpuram Main Road,

Katupakkam,

Chennai -56.

 
Featured Posts
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square

Sathya Clinic                   Sathya Clinic                                 Sathya  Clinic

  • b-facebook
  • Twitter Round
  • b-googleplus
bottom of page